×

அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும்

 

தர்மபுரி, ஏப்.30: மொரப்பூர் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலை பணியாளர்கள் சந்திரன், கிருஷ்ணன், அமானுல்லா உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மனு பெட்டியில் போட்ட மனுவில் கூறியிருப்பதாவது: மொரப்பூர் அருகே உள்ள தனியார் இரும்பு தொழிற்சாலையில், கடந்த 1962ம் ஆண்டு முதல் 176 பேர் பணியாற்றி வந்தோம். 1983ம் ஆண்டு தொழிற்சாலையை, நிர்வாகம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி விட்டது.

தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், மீண்டும் தொழிற்சாலை திறக்கப்படவில்லை. இதனால் நாங்கள் பணியாற்றிய காலத்திற்கான பணப்பலன்கள் மற்றும் இழப்பீடு கோரி, 1988ம் ஆண்டு தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 176 பேருக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, 1997ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் எங்களுக்கு தர வேண்டிய இழப்பீட்டில், 3ல் ஒரு பங்கு தொகை அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அதன் பின்னர் மீதமுள்ள 2 பங்கு தொகையை தனியார் இரும்பு தொழிற்சாலை நிர்வாகம் வழங்கவில்லை. இதனால் மீண்டும் நாங்கள் கடந்த 2006ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தோம். இந்நிலையில், எங்களில் 48 பேருக்கு மட்டுமே நிலுவை 2 பங்கு வழங்கப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. வேலை இழந்த 176 பேருக்கும், மீதமுள்ள 2 பங்கு இழப்பீட்டை, மாவட்ட நிர்வாகம் பெற்று தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Chandran ,Krishnan ,Amanullah ,Morapur ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்